பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆய்வு பணிகள் அனைத்து மாவட்டத்திலும் தொடங்கி உள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் 43 தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் 213 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வின் போது பேருந்துகளின் தரம், வேகக்கட்டுபாட்டுக் கருவி, அவசரகால வழி கதவுகள், முதலுதவி பெட்டி, பேருந்துகளின் ஆவணங்களை உள்ளிட்டவற்றை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.பி.செந்தில்குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்கோட்டுவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 15 பேருந்துகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவருமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். மேலும், வரும் மே 30ஆம் தேதிக்குள் பள்ளிபேருந்துகளை ஆய்வு செய்து சான்றிதழ் பெறாத பேருந்துகளை பயன்படுத்தக்கூடாது எனவும் உத்திரவிட்டுள்ளார்.
இதேபோன்று நெல்லை மாவட்டம் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் இன்று முதல் கட்டமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தென்காசி கோட்டாட்சியர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.