காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா, சிறுதாமூர் பட்டா கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆர்எஸ் மைன்ஸ் என்ற தனியார் கல் குவாரியில் நேற்று முன்தினம் (ஜூன்.07) மாலையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரு பொக்லைன் இயந்திரம், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் சேஷாத்ரி (19), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்கான் (30) என இரண்டு வடமாநிலத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடல்கள் மீட்பு
இதையடுத்து நேற்று (ஜூன்.08) தீயணைப்புத் துறையினர் கல்குவாரியில் மூன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவை அகற்றி முதற்கட்டமாக பொக்லைன் இயந்திரத்தை மீட்டனர். தொடர்ந்து, உயிரிழந்த இருவரது உடல்களை மீட்கும் பணியை மேற்கொண்டதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் சேஷாத்ரி என்பவரது சடலம் சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து இன்று (ஜூன்.09) இரண்டாம் நாளாக நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவுகளை அகற்றி மண்ணில் புதைந்துள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷர்கானின் உடலைத் தேடும் பணி காலை முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மாலை வேளையில் மண்ணில் புதைந்திருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்கானின் சடலம் மீட்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இதையடுத்து கல்குவாரியில் விபத்து ஏற்பட காரணமாக இருந்த கல்குவாரி உரிமையாளர் செல்வேந்திர குமார், கல்குவாரி மேற்பார்வையாளர் முத்து ஆகிய இருவர் மீதும் சாலவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.