பெரும்பாலானோர் வீட்டில் இட்லி, தோசை காலை உணவாக இருந்தாலும், மாவு அரைத்த முதல் நாளில் தான் இட்லி பஞ்சு போன்று வரும். அடுத்தடுத்த நாட்களில் தட்டோடு தட்டாக சப்பி போயிருக்கும். சில நேரங்களில், மாவு அரைத்த முதல் நாளே பலருக்கும் கல் போன்ற கட்டியான இட்லி தான் கிடைக்கும். இது போன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? கவலைய விடுங்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைபடி இட்லி மாவு ஒரு முறை அரைத்து பாருங்க, இட்லி பொசுபொசுனு பஞ்சு போல வரும்.
இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி - 4 கப்
- உளுந்து - 1 கப்
- ஜவ்வரிசி - 1/2 கப்
இட்லி மாவு அரைக்கும் முறை:
- இவை அனைத்தையும் நன்கு கழுவி, இட்லி அரிசி ஒரு பாத்திரத்திலும், ஜவ்வரிசி தனி பாத்திரத்திலும், உளுந்துடன் 5 வெந்தயத்தை சேர்த்து ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் சுமார் 5 மணி நேரம் ஊற வேண்டும்.
- இப்போது, கிரைண்டரில் முதலில் ஊற வைத்த உளுந்தை சேர்த்து நன்கு மைய அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும். அடுத்து, ஊற வைத்த அரிசி மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
- அடுத்ததாக, இரண்டு மாவை ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க விட்டு, மறுநாள் காலை இட்லி தட்டில் மாவு ஊற்றி 10 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்தால் பஞ்சு போன்ற இட்லி ரெடி.
டிப்ஸ்:
- மாவு புளித்த பின் உப்பு சேர்ப்பதை விட, மாவு அரைத்ததும் உப்பு சேர்த்து புளிக்க வைத்தால் இட்லி பொசு பொசுவொன்று வரும்.
- புளித்த மாவை அதிகம் கிளறாமல் இட்லி ஊற்றினால் இட்லி மென்மையாக இருக்கும்
- அரிசியை அளப்பதற்கு எந்த கப் பயன்படுத்தப்பட்டதோ, அதே கப்பில் தான் மற்ற பொருட்களையும் அளக்க வேண்டும்.
இதையும் படிங்க:
இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!
கோதுமை மாவுடன் 'இந்த' மாவை சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள்.. கொழுப்பு தானாக கரையும்!
சப்பாத்தி பஞ்சு போல் உப்பி வர வேண்டுமா? இந்த 'பழத்தை' கோதுமை மாவுடன் பிசைந்து பாருங்கள்!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்