சென்னை: சட்டவிரோதமாக தொடர்ந்து பணியில் இருக்கும் தற்காலிக கால்நடை மருத்துவர்களை நீக்கிவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அருள்ஜோதி உள்ளிட்ட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “அரசு கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர்கள் பணி நியமனம், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. இதனால் காலி பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியாது.
இருப்பினும், எதிர்காலத்தில் நடைபெறும் கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனத்தில் ஆண்டிற்கு 5 மதிப்பெண் வீதம், எத்தனை வருடம் பணியாற்றினார்களோ? அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம், 731 உதவி கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பானை வெளியிடப்பட்டது.
இதில், பங்கேற்று எழுத்து தேர்வு, நேர்முக தேர்வில் வெற்றி பெற்றோம். இதனைத் தொடர்ந்து தேர்ச்சியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், நாங்கள் அனைவரும் விகிதாச்சார அடிப்படையில் பணி நியமன காத்திருப்போர் பட்டியலில் உள்ளோம். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு படி தற்காலிக மருத்துவர்கள் 187 நிரந்தரமாக்கபட்டனர். தகுதியற்ற 57 மருத்துவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துகளை முடக்க ஐகோர்ட் உத்தரவு!
மேலும், 187 மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள தங்களுக்கு பணி நியமனம் வழங்க முடியாத சூழல் உள்ளது. முறையாக தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொண்டு நாங்கள் காத்திருக்கின்றோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தற்காலிக ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் எங்களுடைய பணி நியமனம் பாதிக்கப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக தொடர்ந்து பணியில் இருக்கும் 187 தற்காலிக கால்நடை மருத்துவர்களை நீக்கிவிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மனுதார்கள் கோரிக்கை தொடர்பாக நவம்பர் 28ஆம் தேதி துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் உரிய முடிவு எடுக்கப்படும். பின்னர், அது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார். இதனை பதிவு செய்த நீதிபதி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-11-2024/22981966_etvwc.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்