காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தையும், போந்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரனேரி பகுதியையும் மாம்பாக்கம் ஆரனேரி சாலை இணைக்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல தலைமுறைகளாக மாம்பாக்கம் கிராமத்திற்கும், ஆரனேரி கிராமத்திற்கும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மாம்பாக்கம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்த பிறகு அப்பகுதியில் செயின்ட்கோபின், இந்துஜா பவுண்டேசன், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருகின்றன.
இதனால் மாம்பாக்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் சிப்காட் நிர்வாகத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மாம்பாக்கம் பகுதியிலிருந்து ஆரனேரி செல்லும் இணைப்புச்சாலை, அதனருகே உள்ள 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை சிப்காட் நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நட திட்ட மிடப்பட்டடுள்ளதாக தெரிகிறது.
இதனால் மாம்பாக்கம் ஆரனேரி இணைப்புச்சாலையை மூடி, வேலி அமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக சிப்காட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், ஆரநேரி மாம்பாக்கம் இணைப்புச்சாலையை மூட எதிர்ப்பு தெரிவித்து மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.