காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளியே பழ, காய்கறி தெருவோரக் கடைகள் உள்ளன. அதில் காய்கறி வியாபாரம் செய்யும் கடை அருகே வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நெகிழிப் பெட்டி (பிளாஸ்டிக் பாக்ஸ்) ஒன்றை அவசர அவசரமாக அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனை கண்ட காய்கறி கடைக்காரர் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரி வெளியே தெரியும் அளவிற்கு உருளை வடிவிலான நாட்டு வெடிகுண்டு இருந்ததைக் கண்டார். இதையடுத்து கடைக்காரர் உடனே அதை எடுத்து மழைநீர் செல்லும் கால்வாயில் போட்டுவிட்டு அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
உடனே காவல் துறைக்குத் தகவல் வந்ததையடுத்து சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்துவந்து, அந்தக் கால்வாயிலிருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து அதைப் பத்திரமாக, பாதுகாப்பாக ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளியே நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது காவல் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது தேர்தல் நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் ஏதேனும் அசாம்பாவிதங்களை ஏற்படுத்த சமூக விரோதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நேயாவை பாதுகாத்து வையுங்கள் - அவர் பேரன்பின் அடையாளம்