காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று (அக்.10) வழக்கம்போல் இவர் பணிக்கு வரும்போது வடமாநில கொள்ளையர்கள் இருவர் இந்திராணியிடம் வழி கேட்பது போல், நாடகமாடி அவரிடம் இருந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
காட்டுப்பகுதியில் பதுங்கிய கொள்ளையர்கள்
இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைத் துரத்தினர். அப்போது துப்பாக்கியைக் காட்டி கொள்ளையர்கள் மிரட்டி விட்டு காட்டுப் பகுதியில் பதுங்கினர்.
செயின் பறிப்பு
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். போதிய வெளிச்சம் இன்மை காரணமாக, இன்று (அக்.11) காலை மீண்டும் காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஐந்து ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. மேவளூர்குப்பம் அருகில் கொள்ளையர்கள் காவல் துறையினரை துப்பாக்கியால் சுட முயன்றனர்.
இதில் லாவகமாக தப்பிய காவல் துறையினர் கொள்ளையன் ஒருவனை சுட்டனர். விசாரணையில் உயிரிழந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தாஷா என்பது தெரியவந்தது.
கொள்ளையன் என்கவுன்ட்டர்
மேலும் ஒரு கொள்ளையனான நஹிம் அத்தர் என்பவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முர்தாஷாவின் உடல் உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி, நகை, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுவனின் உயிரைப் பறித்த ஃப்ரீ ஃபையர் கேம்