தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 20 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து பாமகவினர் தமிழ்நாடு முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாமக சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பொன். கங்காதரன், மாவட்டச் செயலாளர் உமாபதி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான பாமகவினர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதிக்கு வந்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர். பாமகவினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.