சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையினை பின்பற்றாமல், நீதிமன்ற அவமதிப்பு செய்யும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் இன்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
அதில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையினை பின்பற்றாமல் பழைய முழுக் கட்டணத்தையே வசூலிப்பதால் இந்நிறுவன மேலாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
புகாரினை பெற்றுகொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.
50 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு:
சென்னை வானகரம் முதல் வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா என இரண்டு சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜா வரை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வபோது வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா சுங்கச்சாவடிகளில் சாலைகள் பராமரிக்காமல் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கினை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கின்ற சாலைகள் உலகத்தரத்திற்கு இணையாக இல்லை என்பதாலும், ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெறுவதால் 10 தினங்களில் இச்சாலையினை சரிசெய்ய வேண்டும் எனவும், அதுவரை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா சுங்கச்சாவடிகளில் இரண்டு வார காலத்திற்கு சுங்க கட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என அதிரடியாக ஆணை பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலையில் 50 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு