காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்கட்ட தேர்தல் பரப்புரையாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று நேற்று தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
கட்சி நிர்வாகிகளுக்குத் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அவர் பேசுகையில், “திமுகவின் சுய உருவத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள், மக்கள் தற்போது வருத்தம் அடைந்து இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செய்துவிட்டார்கள், பொங்கல் பரிசுத் தொகை முதன்முறையாக 300 ரூபாய் வழங்கியது அதிமுக அரசு. அதன் பிறகு ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, அதன்பிறகு இரண்டாயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு.
கேடுகெட்ட ஆட்சிதான் திமுக!
திமுகவினர் வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பிலுள்ள எதையுமே பயன்படுத்த முடியவில்லை, பொங்கல் பரிசுத் தொகுப்பு முழுவதும் தரமற்ற பொருள்கள், இதனால் விசாரணை ஆணையத்தில் சிக்கிக் கொண்டுள்ளது திமுக. இப்படித்தான் கேடுகெட்ட ஆட்சியாக திமுக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்து புரிந்துள்ளார்கள்.
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாருனு சொன்ன மு.க. ஸ்டாலின் வந்தாரு ஆனால் விடியலை தரவில்லை, டிவியில்தான் வராரு பொதுமக்களை நேரடியாக அவரால் சந்திக்க முடியவில்லை. ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாருனு சொல்லி தெரு தெருவாகப் பரப்புரை செய்துவிட்டு தற்போது டிவியில்தான் பரப்புரை செய்கிறார்.
தெருக்களில் பரப்புரை செய்தால் மக்கள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால் மக்களை திமுக அரசு நேரில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மக்களுக்கு என்ன தேவையோ அதை அதிமுக அரசு வழங்கியது.
காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை வரை அவற்றைக் காப்பாற்றிய அரசாக அதிமுக அரசு உள்ளது. அப்போது 17 ஆண்டுகாலம் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக கூட்டணி ஆட்சியிலிருந்தார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்துசெய்யப்படும் என்றார்கள், ஆனால் அது தற்போது பெரிய விவாதப் பொருளாக உள்ளது.
நீட் விலக்கு நாடகம் நடத்தும் திமுக
நீட் முதல் முதலில் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த காந்திராஜன் அதை நாடாளுமன்றத்திலும் மக்களவையிலும் கொண்டுவந்தார். தற்பொழுது நீட் ரத்துசெய்ய வேண்டும் என்று திமுக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு தந்ததில் தான் தற்போது 517 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.
திமுகவின் பகல் வேசம் கலைந்துவிட்டது, திமுக ஆட்சியில் அவலநிலையை மக்கள் தற்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தீர்ப்பை அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் முழுவதும் நூறு விழுக்காடு தமிழ்நாடு முழுவதும் வெற்றிபெறும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
அதிமுகவைத் தாங்கி நிற்கும் சக்தி தொண்டர்கள்
காவிரி பிரச்சனையைத் தீர்க்க 17 ஆண்டுகாலம் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடமை உணர்வோடு வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க மிகவும் கடுமையாகப் பணியாற்ற வேண்டும்.
அதிமுகவைத் தாங்கி நிற்கும் சக்தி தொண்டர்கள்தான். எனவே தொண்டர்களை ஜெயிக்க வைக்கக் கடுமையாக உழைக்க வேண்டும். தொண்டர்களின் முகத்தில் வெற்றிப் புன்னகைத் தெரிகிறது. அதை என்னால் உணர முடிகிறது. 50 விழுக்காடு தாய்மார்கள்தான் வேட்பாளராகப் போட்டியிடுகின்றனர் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
சாதாரண தொண்டனையும் முதலமைச்சராக்கும் அதிமுக!
தொண்டர்கள் படிப்படியாக முன்னேறி மேடையில் அமர்வதற்கான வாய்ப்புள்ள ஒரே கட்சி அதிமுகதான். அசாதாரணமாகக் கடுமையாக உழைத்தால் என்னைப் போல் சாதாரணத் தொண்டனும் முதலமைச்சராக வர முடியும். ஒரு தொண்டன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டிய கட்சி அதிமுக.
தற்போதைய சூழலில் இந்தத் தேர்தல் நம்முடைய பலம் என்னவென்று ஆள்கின்ற அரசுக்கு நாம் காட்டியே ஆக வேண்டும் என்ற சூழலில்தான் நாம் இப்போது உள்ளோம். கடந்த பத்து மாத ஆட்சிக் காலத்தில் கெட்ட பெயர் வாங்கிய ஒரே அரசு திமுக அரசுதான், இவை எல்லாம் நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு நல்லாட்சித் தர வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க:முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம்: காலையில் எடப்பாடி பழனிசாமி, மாலையில் கனிமொழி பரப்புரை