காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 672 படுக்கைகள் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 375 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 260 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டது. 115 படுக்கைகள் சாதாரண படுக்கைகளாகும்.
தற்போது இம்மருத்துவமனையில் உள்ள 260 ஆக்ஸிஜன் படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இதனால் புதிய நோயாளிகள் படுக்கைகளின்றி வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று (மே.11) வரை மாவட்டத்தில் 45,718 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,369 நபர்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4,696 நபர்கள் மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது வரை 653 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் தொடர்பான கட்டடத்தில் 347 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன. ஆனால், இந்தக் கட்டடம் ஒரு வார காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை கட்டி முடிக்கப்படவில்லை.
தற்போது இம்மருத்துவமனையில் ஆறு லிட்டர் ஆக்ஸிஜன் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிதாக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் 10 லிட்டர் வரை ஆக்ஸிஜன் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வைரலான சிறுவன் - சிறுமி வீடியோ: குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு விசாரணை