காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்து மாடி கொண்ட மகப்பேறு நல மருத்துவப் பிரிவில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மனைவி முத்தமிழ் (22) என்ற கர்ப்பிணி, பரிசோதனை செய்வதற்காக நேற்று(ஜூலை 19) காலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது கணவருடன் வந்திருந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முத்தமிழுக்கு உடனே பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில், சிறுநீர் கழிக்க முத்தமிழ் கழிவறைக்குச் சென்றுள்ளார். தான் இருந்த கட்டிலை விட்டு இறங்கிச் சென்ற கர்ப்பிணியைக் கண்காணிக்க அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க முத்தமிழ் அமர்ந்திருந்த நேரத்தில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கேயே பிரசவமான நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தை வெஸ்டர்ன் டாய்லெட்டில் விழுந்தது. செய்வதறியாமல் முத்தமிழ் கத்திக் கூச்சலிட்டதையடுத்து செவிலியர்கள் வந்து குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தை மருத்துவ நிபுணர்கள் அங்கு இல்லை எனக் கூறி, குழந்தையை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து குழந்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, முத்தமிழின் கணவர் ஞானசேகர் மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த உதவியும் தேவையில்லை எனக் கூறிய ஞானசேகரன் மற்றும் உறவினர்கள், கோபத்துடன் இறந்த பச்சிளம் குழந்தையை இருசக்கர வாகனத்திலேயே எடுத்துச் சென்றனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் நேரத்தில் கண்டிப்பாக உதவியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். ஆனால், மகப்பேறு மற்றும் மகளிர் நலப்பிரிவில் பணிபுரியும் செக்யூரிட்டிகள் மற்றும் மருத்துவமனை பெண் ஊழியர்களில் சிலர், லஞ்சம் கொடுக்கும் நபர்களை மட்டுமே வார்டுக்குள்ளே அனுமதிக்கின்றார்கள் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் சிசு!