காஞ்சிபுரம்: மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் அதிகளவில் ஓடி வருகிறது.
காஞ்சிபுரத்தில் 18 சென்டிமீட்டர், குன்றத்தூரில் 14 சென்டி மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் தலா 13 சென்டி மீட்டர், செம்பரம்பாக்கம் 10 சென்டி மீட்டர் என மாவட்டத்தில் 80 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக அப்பகுதியில் சிறு பால கட்டுமானப் பணியானது நடைபெற்று வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், பாலம் கட்டும் இடத்தில் மழை நீர் அதிகளவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் பாலம் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரம் வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை நீர் முழுவதுமாக வடிந்த பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், பிறகு தான் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேர் பலி