காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்று (மே 09) வரை 44ஆயிரத்து 489 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 39 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4ஆயிரத்து 856 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, 631 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் (மே 10) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் பெரு நகராட்சி நிர்வாகத்தினர் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நகராட்சி ஊழியர்கள் வழங்கியும் வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் பாதிப்படைந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வீடுகளில் சிவப்பு ஸ்டிக்கரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் வீடுகளில் பச்சை நிற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்து காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகின்றது.