காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெள்ளைக்குளம் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், அவசரக்கால உதவிகளை மேற்கொள்ள, பெரு நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (மே.28) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபூர் ரகுமான் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களின் பகுதிகளுக்குச் சென்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளைக்குளம் பகுதியிலுள்ள மின்சார தகன மேடையை ஆய்வு செய்த அவர், கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை தகனம் செய்ய அவர்களின் உறவினர்களிடமோ, ஆம்பூலன்ஸ் ஓட்டுநர்களிடம் எவ்வித கூடுதல் கட்டணமோ, கையூட்டோ பெறக் கூடாது என நகராட்சிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளபட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் அருள்ஜோதி, நகராட்சி ஆய்வாளர் இரமேஷ்குமார், நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி