ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் அருகே பண்ருட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் குவித்து வைத்த ஸ்கிராப் உதிரிப் பொருட்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு மூச்சுச் திணறும் அளவுக்கு அதனைச் சுற்றியுள்ள ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களை கரும்புகை சூழ்ந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் எந்தவொரு அனுமதியின்றி ஸ்கிராப் பொருள்களை பண்ருட்டி சுற்றியுள்ள பகுதிகளில் குவித்ததுதான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் காட்டிய மெத்தனம் மற்றும் அலட்சியப்போக்கினால் இச்சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்று பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதியின்றி செயல்படுவதை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.