காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சியை அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் சீதா. இவருடைய கணவர் குடும்பப் பிரச்னை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த சீதா, உறவினர்களுடனான தொடர்பை முறித்துக்கொண்டு தனது மகள் தனலட்சுமி, மகன் பாஸ்கருடன் வசித்துவந்துள்ளார்.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சீதா குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது மகன் பாஸ்கர், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், சீதாவும் அவருடைய மகள் தனலட்சுமியும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சிறிது நேரத்திற்குப்பின் வீடு திரும்பிய பாஸ்கர் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் பூட்டிய வீட்டிலிருந்து, இருவரையும் சடலமாக மீட்டு, உடல்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். தாயும், மகளும் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மகள் தற்கொலையால் மனமுடைந்த தந்தையும் தற்கொலை - பெரம்பலூரில் சோகம்