காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ்(23). இவர், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(25), என்பவருடன் கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு நீண்ட நேரமாகியும் ஜான்ரோஸ் வீடு திரும்ப வில்லை.
இதனால் சந்தேகமடைந்த இளைஞரின் உறவினர்கள், ஜான்ரோஸை காணவில்லை என ஸ்ரீபெரும்புதுார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜான்ரோஸை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்தூர் கிராமத்தில் உள்ள புதர் மண்டிய பகுதியில் ஜான்ரோஸ் உடல் அழுகிய நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜான்ரோஸ், கார்த்திக் என்பவருடன் போந்தூர் கிராமத்திற்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஜான்ரோஸ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகன் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி தாயார் மனு!