காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் தரம் குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (மே.02) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளிலுள்ள அரிசிகளின் தரம் குறித்து அமைச்சர் சக்கரபாணியே லாரியில் ஏறிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரிடம், குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமற்றதாக இருந்தால் அதற்கு முழு பொறுப்பும் தாங்கள் தான் என்றும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
நடவடிக்கை: இருப்பினும் விவசாயிகளிடம் கையூட்டு பெறப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு இதுவரை 27 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டும், இருவர் சிறைக்கு அனுப்பப்பட்டும், இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து, இத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வு செய்யும் குழுக்கள்: நியாயவிலை கடைகளில் தரமான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு அரசு உறுதியாக உள்ளது. ஆகையால், குடோனில் இருந்து நியாய விலை கடைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு வழங்கல் அலுவலரே பொறுப்பு: குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமாக இருப்பதற்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலருக்கு தான் முழு பொறுப்பு, இனிவரும் காலங்களில் நியாய விலை கடைக்கு அரிசி கொண்டு வருவதற்கு முன்பே குடோனிலேயே அதன் தரத்தை சரி பார்த்து தரமான அரிசி மட்டுமே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வட்டத்திற்குட்பட்ட 10 நியாய விலை கடை விற்பனையாளர்கள் தரமற்ற அரிசி வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இது போன்ற தவறு நடக்காது என அவர்கள் உறுதியளித்தன்பேரில், அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. பணிச்சுமை அதிகமாக இருப்பதால் 4,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் முடிவெடுத்துள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கை இத்துறை மூலம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி ஜி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள், உணவு மற்றும் வழங்கல்துறை உயர் அலுவலர்கள்,அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ரேசன் அரிசியில் புழு- கிராம மக்கள் போராட்டம்