காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் வளர்ச்சி திட்ட இலக்குகள் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செங்காடு கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை எனவும், தரமற்ற பொருட்கள் போடுவதாகவும் முதல்வரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் செங்காடு கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் பிரபாகரன் நேரடியாகச் சென்று நியாய விலை கடையில் ஆய்வு செய்தார்.
அதன்பின் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முறையாக பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அப்போது நியாய விலை கடைக்கு வழிப்பாதை ஏற்படுத்தி தரக் கோரியும், நியாய விலை கடை பழுதடைந்து காணப்படுவதால் சீர் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமி, காஞ்சிபுரம் வாணிப கழக மண்டல மேலாளர் சத்யவதி தேவி,
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காததால் பெண்கள் போராட்டம்!