காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் நேற்று (பிப். 4) காலை நடைபெற்ற கல்குவாரி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும் இவ்விபத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியானது நேற்று காலை முதல் நடைபெற்றுவந்த நிலையில் மாலையில் அப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணிக்கே தொடங்க வேண்டிய மீட்புப் பணிகள் தாமதமாக 10 மணிக்குத் தொடங்கியுள்ளன. அதையொட்டி ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியானது தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்த தர்மபுரியைச் சேர்ந்த கிரேன் ஆப்பரேட்டர் மணிகண்டனுடைய உறவினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் ஆறுமுகசாமி, தேவு, சேகர் ஆகியோர் மீது சாலவாக்கம் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...கல்குவாரி விபத்து! - சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!