தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்கள்தோறும் மக்கள் நீதி மய்யம் கூட்டங்கள் நடத்தி வருகிறது.
அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், முக்கிய பொறுப்பாளர்களான மௌரியா, உமாதேவி, பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகேந்திரன், ’மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்கள்தோறும் கூட்டங்களை நடத்தி, ஆலோசனைகள் வழங்கிவருகிறோம். தற்போதுவரை 11 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ள நிலையில், புதிய பொறுப்பாளர்களை நியமித்து கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
2021ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலே மக்கள் நீதி மய்யத்தின் இலக்காக இருக்கிறது. கிராமங்கள்தோறும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கட்சி சென்றடையும் வகையில் செயல்படவேண்டும் என பொறுப்பாளர்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளோம்.
கிராமசபை மற்றும் குடிமராமத்து பணிகளை மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே தங்கள் பொறுப்பாளர்களின் மூலம் செய்துவரும் நிலையில், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதை வரவேற்கிறோம்’ என்றார்.