சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே தாழம்பூர் கிராமத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தன் பெயரிலுள்ள நிலத்தை தனது மனைவியின் பெயரில் மாற்றுவதற்காக கண்ணன் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் வில்லங்க சான்று கோரி விண்ணப்பித்திருந்தார்.
அப்போது தன் பெயரில் இருந்த நிலம் பழனி என்கின்ற தனி நபர் ஒருவரின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு ஆவணங்களை எடுத்துப்பார்க்கும்போது கண்ணன் என்ற அவருடைய பெயரில் வேறு ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து பழனி என்பவர் பொய்யான சாட்சிகளை வைத்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார் என்பது அம்பலமானது.
இதனையடுத்து தன் பெயரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் கண்ணன் புகார் மனு அளித்துள்ளார்.