காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசித்திப்பெற்றதாகும். இந்த கோயிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மோற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கருட வாகனம் மற்றும் திருத்தேர் என பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவார்.
வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும்பொழுது சுவாமிக்கு முன்னும் பின்னும் வடகலை, தென்கலை, பிரிவு ஐயங்கார்கள் வேத மந்திரங்களையும், பாசுரங்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில், எட்டாம் நாளான நேற்று குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் திருவீதி உலா வரும்பொழுது திருக்கச்சி நம்பி தெரு பகுதியில் வேடுபறி உற்சவம் நடக்கும். அவ்வாறு நடக்கும்பொழுது தென்கலை பிரிவினர், திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முற்பட்டுள்ளனர். அப்பொழுது கோயில் அர்ச்சகர்களும், வடகலை பிரிவினரும், திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை பாடவிடாமல் தென்கலை பிரிவினரை தடுத்துள்ளனர். இதனால் இரு பிரிவினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. குதிரை வாகன உற்சவத்தின்போது ஐயங்கார்களின் இரு பிரிவினரும், சுவாமி தரிசனம் செய்யக்கூடிய பொதுமக்கள் முன்னிலையிலேயே கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகலை, தென்கலை பிரிவினர் சாலையிலேயே நடத்திய இச்செயல் சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது ஏதாவது ஒரு திருவிழாவில் இரு பிரிவினரும் மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.