காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 7ஆம் நாளான இன்று (மார்ச் 24) மகா ரத திருத்தேர் திருவீதி பவனி நடைபெற்றது.
இதையொட்டி ஏகாம்பரநாதர் சுவாமி, ஏலவார்குழலி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் 64 அடி உயரமுள்ள மரத்தினாலான மகா ரத திருத்தேரில் எழுந்தருளி தீபாராதனைகள் கட்டப்பட்டு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார்.
பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகா ரத திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்ல நான்கு ராஜ வீதிகளில் ஏகாம்பரநாதர் காட்சி அளித்தார். இதனை அப்பகுதி மக்கள் அனைவரும் நேரில் சென்று தரிசனம்செய்தனர்.