காஞ்சிபுரம்: ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆரோக்கிய அருண். இவர் காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மூத்த சகோதரர் சகாய பாரத் என்பவரும் காவல் துறையில் பணிபுரிகிறார். தாங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி வருவதாகவும், எனவே, தங்களிடம் முதலீடு செய்யும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் லாபம் தருவதாகவும் இவர்கள் குடும்பம் பலரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
குடும்பமே காவல் துறையில் பணி புரிவதாலும், ஆரோக்கிய அருணின் தம்பி இருதயராஜ், காஞ்சிபுரத்தில் ட்ரங்கன் மங்கி என்ற உணவகம் நடத்தி வந்ததாலும் இவர்கள் ஆசை வார்த்தைகள் பலராலும் நம்பப்பட்டது. இதனால் இவர்களிடம் பலரும் முதலீடு செய்தனர். குறிப்பாக, காவல் துறையில் பணியாற்றும் பலர் இவர்களிடம் சிக்கியுள்ளனர். பல கோடி ரூபாய் முதலீடாகப் பெற்ற ஆரோக்கிய அருண் கடந்த வருடம் முதல் முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் தரும் பணம் தராமல் இருந்துள்ளார்.
இது குறித்து புகார் எழுந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஆரோக்கிய அருணின் தாய், அண்ணன் மற்றும் அண்ணன் மனைவி, தம்பி மற்றும் தம்பி மனைவி ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர். இதனிடையே தனது மனைவியுடன் தலைமறைவான ஆரோக்கிய அருண், தன்னிடம் முதலீடு செய்த சிலரிடம் கான்ஃபெரன்ஸ் கால் மூலம் பேசிய தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், நேற்று ஆரோக்கிய அருண் மற்றும் அவரது மனைவி, ஆரோக்கிய அருணின் தந்தை ஆகியோரைக் கைது செய்தனர். ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த மூன்று பேரையும் சேர்த்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு நபர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையைச் சேர்ந்தவர்களே மோசடியில் கைதான சம்பவம் குறித்து கூறிய மாவட்ட காவல் துறை, விசாரணை முடிந்தவுடன் வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது.