காஞ்சிபுரம் மாவட்டத்திற்காக நபார்டு வங்கி தயாரித்துள்ள வங்கிகளுக்கான வளம் சார்ந்த கடன் மதிப்பீட்டு அறிக்கையை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.
அந்த அறிக்கையின்படி, மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் பிரிவின் கீழ் பல்வேறு வங்கிகளும் ரூ.2846.25 கோடி அளவுக்கு கடன் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு ரூ.2024.06 கோடி, சமூக கட்டமைப்பிற்காக ரூ.282.15 கோடி, தொழிற்சாலை, சேவை பிரிவில் ரூ.272.56 கோடி, வீட்டுக்கடன், புதுப்பிக்கதக்க சக்தி, ஏற்றுமதி கடனாக ரூ.137.07 கோடி, கல்விக்கடனாக ரூ.130.40 கோடி என கடன் வழங்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை 2021-22 நிதியாண்டுக்கானது. இது தற்போதைய நிதியாண்டுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட கடன் அளவை விட சுமார் ரூ. 354.73 கோடி அதிகமாகும். முன்னுரிமைக் கடன் பிரிவுகளுக்கான விதி முறைகள் பல்வேறு வகையான முதலீடுகளுக்கான அலகுவிலை (யூனிட்காஸ்ட்) மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள், வங்கிக்கடன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வளம் சார்ந்த கடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்நிகழ்வில் நபார்டு மாவட்ட வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் கே.சண்முகராஜ், காஞ்சிபுரம் மாவட்ட இணைப் பதிவாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.