உலகப் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் மாதந்தோறும் வரும் ஏகாதசி நாளன்று உற்சவர் வரதராஜப் பெருமாளும், வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று பெருந்தேவித் தாயாரும் கோயில் வளாகத்திற்குள் வீதியுலா வருவது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்நிலையில், நேற்று (ஏப். 23) சித்திரை மாதம் முதல் ஏகாதசியும், வெள்ளிக்கிழமையும் இணைந்து ஒரேநாளில் வந்ததால் உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருமலையிலிருந்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவ பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், மாலையில் உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் தனித்தனியாக கேடயத்தில் திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள தோட்டத்திற்குள் எழுந்தருளினர்.
பின்னர் அங்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்துக்குள்ளேயே உலா வந்து மீண்டும் சந்நிதிக்கு வந்து சேர்ந்தனர். கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக மிகக்குறைவான பக்தர்களே இதில் பங்கேற்றிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழப்பு