காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் நோய்த் தொற்று தாக்குதலைக் கண்டுபிடிக்க வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் பணியை காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுகாதாரத்துறை மூலம் 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் காஞ்சிபுரம் பெரு நகராட்சிப் பகுதிக்கு 50 கிட்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு 50 கிட்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 65 கிட்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 33 கிட்கள் என காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிக்கு 198 கிட்கள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் மொளச்சூர் பகுதிக்கு 51 கிட்களும், நந்தம்பாக்கம் பகுதிக்கு 51 கிட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் கிடைக்கும் கிட்களை வைத்து எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு சோதனை நடத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,060 பேர் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்' என்றார்.
இதையும் படிங்க... 'வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்