காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பெருநகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி பாத்திமா. இத்தம்பதியின் மகன் புனிதன் (4), மகள் பொன்மதி (2).
புனிதன், மானாமதி கூட் ரோட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்துவருகிறார். தினமும் பள்ளிக்கு பள்ளி வேனில் சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு பள்ளி வேனில் வந்த புனிதனை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சாலைக்கு வந்தனர்.
புனிதனை வேனிலிருந்து இறக்கியபோது உடனிருந்த பொன்மதி சாலையைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் பொன்மதி மீது மோதியதில் பொன்மதி பலத்த காயம் அடைந்தார். அவ்விடத்திலிருந்து பொன்மதியை உடனே பெற்றோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை பொன்மதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்க: வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு