வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் ஏழு கடற்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பயிற்சி நிறைவு பெற்றதையொட்டி இன்று 92ஆவது பயிற்சி நிறைவு விழா அரக்கோணம் கடற்படை விமான தள வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஐஎன்எஸ் ராஜாளி விமான தளத்தின் கமாண்டர் ஸ்ரீரங் ஜோகில்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கோவா பிராந்திய கடற்படை அலுவலர் ரியல் அட்மிரல் பிலிபோஸ் ஜார்ஜ் பினுமூட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் நின்று பார்வையிட்டார்.
பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு அவர் சான்றிதழ்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சிறப்புரையாற்றிய அவர், பயிற்சி மேற்கொண்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.