‘நகரேஷு’ என்றால் நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று பொருள். இந்தப் பாராட்டுகளை காஞ்சிக்கு அள்ளித்தந்தவர் ‘கவிஞர் காளிதாதன்’. காஞ்சிபுரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான். ஏனென்றால் அங்கு புராதன கோயில்கள் நிறைந்து காணப்படும்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம், உலகப் பிரசித்திப் பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட சைவ, வைணவம் எனக் கோயில்கள், மண்டபங்கள் என இவையனைத்தும் காஞ்சிபுர நகரின் பல்வேறு இடங்களில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் கலைநயமிக்க சிற்பங்களுடைய கல்தூண்களை வெளிநாட்டவர் வியந்து கண்டு ரசித்துச் செல்வர். மேலும் முக்கியத் திருத்தளங்களில் உள்ள பழமையான மண்டபங்களை இடித்து புதுப்பிக்கும்போது பழமையான கல்தூண்கள் காணாமல்போய் உள்ளதாக புகார்களும், வழக்குகளும் பல உள்ளன.
இதுபோன்று புராதான கற்சிற்பங்கள் கொண்ட தூண்கள் குறித்து சர்ச்சைகள் உள்ள நிலையில் காஞ்சிபுரம் அருகே பஞ்சுப் பேட்டை பகுதியில் துணை மின் நிலையம் அருகே கழிவுநீர் செல்லும் கால்வாய் பாலத்தின் மேற்புறத்தில் மிகவும் பழமையான இந்தப் புராதன கல்தூண்கள் பாலத்தின் மீது போடப்பட்டுள்ளது.
இதேபோல் கழிவுநீர் கால்வாய் பகுதியில் சுற்றி பல இடங்களில் ஆங்காங்கே தொன்மையான கல்தூண்களும் புதர்மண்டி கேட்பாரற்ற நிலையில் உள்ளது. கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் புராதன கற்சிற்பங்கள் கொண்ட தூண்களைக் காணும் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிற்ப கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை ஆண்டவர்கள்தான் நமது மாமன்னர்கள் அனைவரும். காரணம் அவர்களது சாதனைகளையும், கலைநய எண்ணத்தையும் பிரதிபலைக்க இருந்த ஒரே கலை, அது சிற்பக்கலை. இப்படி வரலாற்றை வெளிகொணரும் அடையாளங்கள் கழிவுநீரோடு வாழ்ந்துவருவது வேதனையான ஒன்று.
இதுபோன்றவைகளைப் பாதுகாக்க அரசு பல வழிமுறைகள் வகுத்தாலும், ஒரு செயலை கவனமற்ற நிலையில் இருக்கும்போது அதனைக் கண்டறிந்து திருத்திக்கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வரலாற்று பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தொன்மையான கல்தூண்கள் கழிவுநீர் கால்வாயில் இருப்பதால் காஞ்சி பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
நமது பழமையையும், பெருமையான கலாசாரத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் மிகவும் பழமையான புராதனமான கல்தூண்களை மீட்டு பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.