சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் அக்டோபர் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இரண்டு நாள்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள். இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முழுவதும் விளக்குகள், பளபளக்கும் சாலைகள், பாதுகாப்பு அதிகரிப்பு, கெடுபிடிகள் என பரபரப்பாக இருக்கிறது மாமல்லபுரம். அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இரண்டு நாள்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
மாமல்லபுரத்துக்கும் சீனாவிற்கும் வரலாற்றுத் தொடர்பு உள்ளது. அதனை உறுதிசெய்யும் விதமாகவே இந்தச் சந்திப்புக்கு இவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் அதிகத் தொடர்பு இருந்துள்ளது.
வரலாற்று ரீதியாக புத்த மதத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கான சான்றுகளை மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் காண முடியும். பெளத்தர்களின் தியான நிலைகளை விளக்கும் சிற்பங்கள், பெளத்தர்களின் போதனைகள், கலைகள் ஆகியவற்றை விவரிக்கும் கலைச் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
கி.பி. 5ஆம் நூற்றாண்டின்போது தமிழ்நாட்டில் பல்லவர்கள் ஆண்டபோது, மாமல்லபுரம் (மகாபலிபுரம்) துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து சீனாவுக்குக் கடல் வழியாக வர்த்தகம் நடந்துள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. குறிப்பாக பல்லவர்கள், சீனாவுடன் கடல் வாணிபத்தை செய்துவந்தனர்.
பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்த பெளத்தத் துறவி போதிதர்மன், சீனாவில் முக்கியமான துறவியாக இன்றும் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். பல்லவர்களின் மூன்றாவது இளவரசரான போதிதர்மன், காஞ்சிபுரத்திலிருந்து மாமல்லபுரம் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கு புத்த மதத்தைப் பரப்பியுள்ளார். இவரின் காலம் கி.பி. 5 முதல் 6ஆம் நூற்றாண்டு வரை எனக்கூறப்படுகிறது.
எனினும், வரலாற்று ரீதியாகவே தொன்றுதொட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம், ஆன்மிகம், கலாசாரம் அடிப்படையிலான உறவுகள் இருந்துள்ளது. இதை சீனாவுக்கு வெளிப்படுத்தும் விதமாகவே, சீனாவுடன் நட்பை இறுக்கமாக்கிக் கொள்ள ஷி ஜின்பிங் - மோடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. மேலும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2014ஆம் ஆண்டு மாமல்லபுரம் அருகே ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடைபெற்றது. அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரலாற்றுப் பெருமைவாய்ந்த மாமல்லபுரத்தினை பார்வையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் சுற்றுலாத் துறையை வளப்படுத்தும் வகையில் சீன அதிபருடனான மோடியின் சந்திப்பு அமைய வாய்ப்புள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், 5 ரதங்கள், கிருஷ்ணர் வெண்ணெய் எடுப்பது, அர்ஜுனன் தபசு ஆகியவை சீனர்களை மட்டுமல்லாமல் சீன அதிபரையும் கவரும்.
முன்னதாக கடந்த 63 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1956ஆம் ஆண்டில் சீனாவின் முதல் பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகே 9 கி.மீ. தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் என்னும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்துவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி - ஷி ஜின்பிங்கை வரவேற்கும் பேரணி