காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள கமுக்கபள்ளம் கிராமமானது பாலாற்றுக் கரையை ஒட்டி உள்ளது. தற்போது சில நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இன்று பாலாற்றின் கரையோரம் சென்றுள்ளார். அப்போது பாலாற்றின் கரையோரம் சாமி சிலை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். அப்போது அதை உடனடியாக வெளியே எடுத்து ஆறுமுகம் சுத்தம் செய்துள்ளார்.
சிலை கருவூலத்தில் ஒப்படைப்பு
இந்தச் சிலையானது சுமார் ஒன்றரை அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்டது. இச்சிலை குறித்து கிராம நிர்வாக அலுவலரிடத்தில் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாமி சிலையை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய ஆய்வில் கரை ஒதுங்கியது விஜய நகர பேரரசு காலத்தைச் சேர்ந்த ஹய்க்ரீவர் ஐம்பொன் சிலை எனக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சிலையானது அரசு விதிமுறைகளின்படி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலாற்றுக் கரையில் ஹயகிரீவர் ஐம்பொன் சிலை ஒதுங்கிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சபாஷ்.. தாம்பரத்தில் பளபளக்கும் பட்டாக்கத்தி... பதுங்கிய கும்பல், தூக்கிய காவலர்கள்!