கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 26) முதல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
![சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி சிகை திருத்தும் தொழிலாளர்கள் மனு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:11:04:1619430064_tn-kpm-04-saloon-shop-owners-collector-petition-pic-vis-byte-script-tn10033_26042021145957_2604f_1619429397_890.jpg)
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் சிகை திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பசி மற்றும் கடன் தொல்லையால் மனமுடைந்து சிலர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. அப்போது அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவியும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ள நிலையில், மீண்டும் சலூன் கடைகள் இயங்க மாநில அரசு தடை விதித்திருப்பது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.