காஞ்சிபுரம்: சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருபவர் அருணா லட்சுமி. இவரது மகள் சாந்தினி லட்சுமி (5) மலை ஏறுவதில் ஆர்வமுடையவர். இச்சிறுமி கடந்த ஒரு மாதமாக மலை ஏறுவதற்கான பயிற்சி மேற்கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 155 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கயிறு மூலம் இரண்டு நிமிடத்தில் கீழே இறங்கினார் சாந்தினி லட்சுமி. மேலும், அருகிலிருந்த 101 அடி உயரமுள்ள மலை உச்சியை கயிறு மூலம் 2 நிமிடம் 15 நொடிகளில் சென்றடைந்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் சிறுமியின் தாயார் அருணா லட்சுமி கூறுகையில், "சிறுமிக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே மலை ஏறுவதற்கான ஆர்வம் இருந்தது. அதனால், சிறுமியை ஊக்கப்படுத்தி குழந்தைகள் நாளை முன்னிட்டு பெற்றோர்கள் அனைவரும் விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது இந்தச் சாதனையைச் செய்துள்ளார்" என்றார்.
சாதனை படைத்த சிறுமிக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 9 புத்தகங்கள் வெளியிட்டு சிறுமி சாதனை