காஞ்சிபுரம்: கோயில் நகரம், காஞ்சிப்பட்டு எனப் பெயர்போன காஞ்சிபுரத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது உண்டு. மேலும், சுபமுகூர்த்தப் பட்டுப்புடவைகளை எடுப்பதற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வெளி நாடுகள் போன்ற இடங்களிலிருந்து பலதரப்பட்டவர்கள் காஞ்சிக்கு வருவதுண்டு.
கடந்த பல ஆண்டுகளாக காஞ்சிபுரத்தையே தன் சாம்ராஜ்ஜியமாகக் கட்டிக் காத்துவந்த பிரபல ரவுடி டான் ஸ்ரீதர் தனபால் காஞ்சியில் உள்ள பல தொழிலதிபர்கள், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தனக்குத் தேவையான நிலத்தைப் பெற்றுவிடுவார்.
மிரட்டலுக்குப் பணியாதவர்களைக் கொலை செய்வதுதான் டான் ஸ்ரீதரின் பாணி. இதனால் அமைதியாக இருந்த கோயில் நகரமான காஞ்சி கொலை நகரமாக உருவெடுத்தது. இதனால் பல்வேறு வகையில் காஞ்சி மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
அரசு என்ன கைகட்டி வேடிக்கை பார்க்குமா? காவல் துறையின் பார்வை காஞ்சியில் பட்டது. டான் ஸ்ரீதர் தனபால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் தன்னை கைதுசெய்ய நெருங்கிவிட்டனர் என்பதை அறிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறைக்கும் பயந்து சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்த டானுக்கான போட்டி
டான் ஸ்ரீதர் தனபாலின் இறப்பிற்குப் பிறகு காஞ்சியில் அடுத்த டான் ஸ்ரீதர் யார் என்ற போட்டியில் மறைந்த ஸ்ரீதர் தனபாலின் மைத்துனர் தணிகாவும், ஸ்ரீதர் தனபாலின் கார் ஓட்டுநர் தினேஷும் கோதாவில் இறங்கினர்.
இருவரும் தலைமறைவாக இருந்துகொண்டு அடுத்த ஸ்ரீதர் யாரென கடும் போட்டி ஏற்பட்டு காஞ்சிபுரம் நகரில் பல்வேறு கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டுவந்தனர். மேலும் அவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தங்கள் பலத்தை நிரூபிக்க மோதிக்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரும் தீவிரமாக ஸ்ரீதர் ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தனர். காஞ்சியில் மீண்டும் ரவுடி உருவெடுத்துவிடக் கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் மிகத் தீர்க்கமான முடிவிலே உள்ளனர்.
களமிறங்கிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை
இது மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் ஆள்கடத்தல், கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, தொழிற்சாலை நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துவருவதைத் தடுப்பதற்கு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக படப்பை குணா செயல்பாட்டைத் தடுக்கும்வகையில் அவரது கூட்டாளிகளைக் கண்காணித்து அவர்களைக் கைதுசெய்யும் படலத்தை காவல் துறை தொடர்ந்தது. அதில் படப்பை குணாவின் தொழில் கூட்டாளியான போந்தூர் சிவா கைதுசெய்யப்பட்டு அவரது வாகனங்கள் அனைத்தும் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும் தன்னை என்கவுன்டர் செய்யப்போவதாக தகவலறிந்து உயிருக்குப் பயந்து போய் தலைமறைவாக இருந்த படப்பை குணாவும் கடந்த மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். காஞ்சிபுரத்தில் தொடர்ந்து வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துவந்த பொய்யாகுளம் தியாகுவையும் அரியானா அருகே சிறப்பு தனிப்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின் படப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளியான மாம்பாக்கம் பிரபு, படப்பை குணாவின் வலதுகரமாகச் செயல்பட்டு தலைமறைவாக இருந்த போந்தூர் சேட்டு ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறப்புத் தனிப்படை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாம்பாக்கம் பிரபுவிற்குச் சொந்தமான பென்ஸ் உள்ளிட்ட நான்கு உயர் ரக சொகுசு கார்களையும் காவலர்கள் பறிமுதல்செய்தனர்.
ரவுடியின் கார் ஓட்டுநரிடம் விசாரணை
இந்நிலையில் தலைமறைவாகி காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த முக்கியக் குற்றவாளியான ஸ்ரீதர் தனபாலின் கார் ஓட்டுநர் தினேஷ் போலீஸ் என்கவுன்டர் பயத்தில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான தினேஷ் மீது ஐந்து கொலை குற்றங்கள் உள்ளிட்ட 40 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் என்கவுன்டருக்குப் பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்துவரும் குற்றவாளிகளில் செய்கையைக் கண்டு பொதுமக்கள் காவல் துறைக்குப் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிர் பயத்தால் நீதிமன்றத்தில் சரணடையும் பிரபல ரவுடிகளால் கொலை நகரமாக மாறிய காஞ்சிபுரம் மீண்டும் அமைதி நகரமாக மீளத் தொடங்கியுள்ளதால் தொழிலதிபர்களும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.