காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் உலகப்பிரசித்திபெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குகின்ற காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் மற்றும் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளில் தீபாவளி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று, இரு கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் நான்கு ராஜவீதியில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு தீபாவளித் திருநாளான இன்று காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பாளின் உற்சவர் லக்ஷ்மி, சரஸ்வதி தேவியருடன் நீல நிறப்பட்டு உடுத்தி குங்குமப்பூ மாலை, ரோஜாப் பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வரத்தொடங்கினர்.
இதேபோன்று காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து சோமாஸ் கந்தர், ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதரின் உற்சவர் புறப்பட்டு நான்கு ராஜா வீதிகளில் வீதி உலா வரத்தொடங்கினார்.
இந்நிலையில் வெவ்வேறு நேரங்களில் புறப்பட்ட காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் மற்றும் ஏகாம்பரநாதர் உற்சவர்கள் அபூர்வமாக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சேர இணைந்து சங்கர மடத்திலிருந்து நான்கு ராஜ வீதியில், திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதுநாள் வரை இரு கோயிலில் இருந்து வெவ்வேறு நேரங்களில் திரு வீதி உலா வரும் உற்சவர்கள் வரலாற்றிலேயே முதல்முறையாக இரு சுவாமிகளும் ஒரே நேரத்தில் திரு வீதி உலா வருவது இதுவே முதல்முறை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அரிய காட்சியைக்கண்டு மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இரு சுவாமிகளையும் தீபாவளி தினத்தன்று தரிசனம் செய்து மனநிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்