காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முட்டுக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அரசுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கி வந்தது. குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் போர் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வந்துள்ளார்.
அது மட்டுமல்லாது அந்த தண்ணீரை பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்றும் வருகின்றார். அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருக்கும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவதால் குடிநீர் கிணற்றில் தண்ணீர் வற்றிப் போகிறது. இதனால் அந்தப் பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திடமும் பேரூராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் அந்த போர்வெல் குழாயை அகற்றக்கோரி காலி குடங்களுடன் அப்பகுதியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அந்த போர்வெல் குழாயை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!