தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (மே 27) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் நகராட்சி அலுவலர்கள் மூலம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறும்,
இப்பணியில் 545 ஆசிரியர்கள் 41 மேற்பார்வையாளர்கள் என 586 பேர் ஈடுபடுகிறார்கள். 52 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர், காஞ்சிபுரம் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தீவிர கரோனா ஒழிப்புப் பணி - மாநகராட்சி தகவல்