காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 11 மணி வரை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டது.
இந்த தரிசனத்திற்காக நேற்று மதியம் முதலே பக்தர்கள் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை சரியாக 5.28 மணிக்கு நடை திறக்கப்பட்டு நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை பக்தர்கள் தரிசித்தனர்.
மேலும், இதற்கான பாதுகாப்பு பணிகளில் 7,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக மருத்துவ வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வழதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய காலி இடங்களில் பத்தாயிரம் பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.