தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், இன்று அந்தந்த மாவட்டத்தின் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில், பணிபுரிய உள்ள அரசு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என அனைத்து தரப்பினரும் சுகாதாரத் துறையினர் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு, கரோனா தொற்று இல்லை என அதன் முடிவு சான்றிதழைக் காண்பித்த பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் 2062 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி தெரிவித்துள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 750 நபர்களில் 20 நபர்களுக்கும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 230 நபர்களில் 6 நபர்களுக்கும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 371 நபர்களில் 12 நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 374 நலர்களில் 8 நபர்களுக்கும், ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 337 நபர்களில் 10 நபர்கள் என 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை