காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியது. இதை தொடர்ந்து புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தங்களது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள், விவசாயத்தை அழித்து கொண்டு வரப்படும் இந்த புதிய விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் வாழும் இக்கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என கூறினர். தங்கள் பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 97 நாட்களாக தொடர்ந்து அமைதியான முறையில் இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றும், அக்டோபர் 2 ஆம் தேதி அன்றும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இன்று ஏகனாபுரம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைவர் சுமதி சரவணன் தலைமையில்
ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டாட்சியர் தண்டபாணி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை உள்பட பாஜகவினர் கைது