தேர்தல் பணி நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 857, ஸ்ரீபெரும்புதூரில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 433, உத்திரமேரூரில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633, காஞ்சிபுரத்தில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 406 என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வாக்களிப்பதற்கு ஏதுவாக 542 வாக்குச்சாவடி மையங்களும், 1872 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 8984 நபர்களும், இதர பணிகளில் சுமார் 2100 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க 21 தொடர்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நன்னடத்தை நெறிமுறை, நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவினம் மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு மற்றும் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு என எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் செயல்படும். பதற்றமான வாக்கு சாவடிகளாக 178 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பட்டு சேலை வாங்க வருபவர்கள் கொண்டு வரும் பணத்திற்கு உரிய ஆவணங்கள், கல்யாண பத்திரிகை போன்றவற்றை கொண்டு வர வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் தேர்தலுக்கு 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
இதையும் படிங்க : தேர்தல் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!