காஞ்சிபுரம் அடுத்த செட்டியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார்(30), சதீஷ்குமார்(28). இருவரும் சகோதரர்கள். இதில், வினோத்குமாருக்கு சுகன்யா(23) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. அதேபோல வினோத்குமாரின் தம்பி சதீஷ்குமாருக்கு கலைவாணி(25) என்ற மனைவியும், 6 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. கலைவாணி அவரது அம்மா வீட்டில் உள்ளார். காஞ்சிபுரம் மண்டித் தெருவில் வினோத்குமார் சொந்தமாக மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது தம்பி சதீஷ்குமார் அதே பகுதியில் டிங்கரிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சகோதரர்கள் இருவரும் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்கள் யாரையும் வீட்டில் சேர்க்காமலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இருவரும் தங்களின் மனைவிகளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி வைத்திருந்ததாகவும், பொருள்கள் ஏதாவது வாங்க வேண்டியிருந்தால் சகோதரர்கள் இருவருமே ஒன்றாக வீட்டை பூட்டிவிட்டு கடைக்குச் சென்று பொருள்களை வாங்கி வந்ததாகவும் தெரிகிறது. இருவரும் தங்களின் மனைவிகளை அக்கம்பக்கத்தில் பேச அனுமதிக்காமல் இருந்தும் வந்துள்ளனர். உறவினர்கள் யாராவது போன் செய்தால் “எனக்கு ஏன் போன் செய்கிறீர்கள், நான் இறந்தால் யாரும் வரக்கூடாது அதேபோன்று நீங்கள் இறந்தாலும் நான் வந்து பார்க்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.08) அண்ணன் வினோத்குமாரின் மனைவி வீட்டின் ஓர் அறையில் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், வினோத்குமாரும், சதீஸ்குமாரும் பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் உள்ளே சென்றவர்கள் வரததால் வினோத்குமாரின் மனைவி சுகன்யா உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் அந்த அறையில் இருந்த இரண்டு மின் விசிறியில் தனித் தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தொந்தரவால் தூய்மைப் பணியாளர் தற்கொலை