காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட அணில்கள்தான் காரணம் என கூறிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், அணில்களை பத்திரமாக மீட்டு வனத்துறையில் ஒப்படைக்க வேண்டியும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் மின்தடைக்கு அணில் ஒரு காரணமாக விளங்குகிறது என கூறியது பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் அதிசயம் குமார் தலைமையில், பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இம்மனுவில், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் அணில்கள்தான் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இப்படி பொறுப்பற்ற முறையில் தெரிவிப்பது கண்டித்தக்கது. நாங்கள் அணில்களை போற்றுகிறோம்.
ஆகையால், அணில்களை பிடித்து வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!