காஞ்சிபுரம்: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியை காணொலியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வற்கு அண்ணாமலை காஞ்சிபுரத்திற்கு வருகைதந்தார். சிவ பெருமானின் பிரித்திவி (மண்) தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியைக் காணொலி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
ஜாகிர் உசேன் விஷயத்தில் நாடகம்
இதையடுத்து, செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை, "மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே வேளாண்மைக்குத் தனியாக வரவு-செலவுத் திட்ட அறிக்கை போட்டிருக்கிறார்கள், மோடி ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் உரத்திற்குத் தட்டுப்பாடு என்பது எதுவும் ஏற்படவில்லை.
எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதைத் தவிர்த்து மாநில அரசு உழவர்களுக்காக என்ன செய்திருக்கிறது, உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும், மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
கவர்ச்சிகரமாக வரவு-செலவுத் திட்ட அறிக்கை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து சமய அறநிலைத் துறை நாடகமாடுகிறது.
பாரபட்சமின்றி திமுகவினர் மீது நடவடிக்கை வேண்டும்
யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது" எனத் தெரிவித்தார்.
அதன்பின் சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து அவரிடம் கேட்டதற்கு, "இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஒன்று காங்கிரஸ்காரர்கள், மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது" எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நாளைமுதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தால் டிஜிபியை முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சியாகத்தான்.
டிஜிபியை ஆதரிக்க தகுதி வேண்டும்
இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் கட்சி மாறி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறு மக்கள் மறந்துவிடுவார்களா என்ன?
சேகர்பாபு வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது, டிஜிபியை ஆதரித்துப் பேசுவதற்குத் தகுதி வேண்டும், சட்டத்தை மதிப்பவராக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகம் வேடமிட்டுக் கொள்ளக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: கோயில் சீரமைப்பு அனுமதி விவகாரம்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு