காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் பாஜக மாவட்டச் செயலாளர் கே.எஸ். பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜக மாநிலத்தலைர் எல். முருகன் கலந்துகொண்டு நிவாரணத் தொகுப்பை வழங்கினர்.
புகழ்பாடும் உரை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஆளுநர் உரை மு.க. ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே உள்ளது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களின் மன உறுதியை குலைத்து வருகிறது.
தேர்தலுக்கு தயார்
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. எப்போது, தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கு பாஜக தயாராக உள்ளது. தற்போதுள்ள கூட்டணி தொடரும்.
திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதியளித்தார்கள். ஆனால், இன்னும் விலையை குறைக்கவில்லை" என்றார்.
சசிகலா தொடர்ச்சியாக ஆடியோ வெளியிட்டு வருவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை என்றும, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என எல்.முருகன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: இரண்டு நாட்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் - பாஜக மாநில தலைவர் எல். முருகன்