காஞ்சிபுரம் மாவட்டம் சேஷாத்ரி பாளையம் பழனி தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றிரவு (ஜுன் 15) அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனைக் கண்காணித்த அடையாளம் தெரியாத நபர் ஓருவர், இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திடீரென இருசக்கர வாகனத்தை இளம்பெண் மீது இடிப்பது போல சென்று அவரது செயினை பறித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனை உணர்ந்த இளம்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பவ்யமாக நடந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை புலி - சிசிடிவி காட்சி