காஞ்சிபுரத்தில் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளான இன்று, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். அத்திவரதரைக் காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்துவருகின்றனர்.
விஐபி தரிசனம் நேற்று மதியம் இரண்டு மணியுடன் நிறைவுபெற்றது. மேலும், இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுமார் ஐந்து கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று, குறைந்தது ஆறு மணி நேரமாவது காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
நேற்று ஆடி கருடன் சேவை நடைபெற்றதால் மாலை 4 மணி முதல் 8 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டு 8 மணிக்கு மேல் பொது தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று அத்திரவரதர் தரிசனத்தின் நிறைவுநாள் என்பதால் அதிகாலை 5 மணி முதல் பொது தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வருவதைப் பொறுத்து இரவு முழுவதும் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 46 நாட்களில் ஒரு கோடியே ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில் இன்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இனி 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் காட்சிதருவார் என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
நாளை அதிகாலையிலேயே தரிசனம் நிறுத்தப்பட்டு, மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் ஆகமவிதிப்படி அத்திவரதர் வைக்கப்படவுள்ளார்.